அடுத்தடுத்து தொடரும் சோகம்… இதற்கான தீர்வு தான் என்ன ?
அடுத்தடுத்து தொடரும் சோகம்… இதற்கான தீர்வு தான் என்ன ?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசித்து வந்த வடமாநிலக் குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் அப்பகுதி மக்களும் குழந்தையை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், காணாமல் போன சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் முட்புதரில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அருகில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், சிறுமி மீது ஒருவருக்கு மேற்பட்டோர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சந்தேக நபரைப் பிடித்து தாக்கிய பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிகிச்சை பெற்று வந்த சிறுமி பின்னர் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (40) என்பவர், டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை அருகிலிருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், சரவணன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள ஆதனூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்சாந்த் (43) மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜைதன் மண்டல் (32) ஆகியோரை வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் தங்கியிருந்த தொழிலாளிகள், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்குள்ளான தொழிலாளியைப் பிடித்து மணிமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் இதுபோன்ற பாலியல் குற்றச் சம்பவங்கள் நாட்டையே உலுக்கும் வகையில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
கருத்துகள் (0)